Saturday, April 12, 2014

நோட்டா (Non of The Above) ஏற்றமா! ஏமாற்றமா!

“இந்தியாவின் கடைநிலை ஏழையும், இது எனது இந்தியா, எனது குரலும் எண்ணமும் இந்தியாவின் ஒட்டுமொத்த நிர்வாகத்தில் பிரதிபலிக்கிறது என்று உணரவேண்டும்” ‘எனது கனவு’ என்கின்ற கட்டுரையில் காந்தியடிகள். 2006 சட்டமன்றத் தேர்தலின் போது நீண்ட வரிசையில் நின்று, வாக்குச்சாவடி அதிகாரியிடம் போய் நான் 49 ஓ போட வேண்டும் என்றேன். அவர் என்னிடம் “ஏங்க இவ்வளவு தூரம் வந்துட்டீங்க, யாராவது சுயேச்சை வேட்பாளருக்குக் கூட ஓட்டுப்போட்டுட்டு போங்க” என்றார். நான் மீண்டும் இல்லை நான் 49 ஓ தான் போட வேண்டும் என்று நிற்க, வாக்குச்சாவடி முகவர்கள் உள்பட வரிசையில் நின்ற அனைவரும் என்னை ஏகத்துக்கும் வெறித்துப் பார்த்தனர். இதில் ஒரு நல்ல விடயம், என் கிராமத்தவர்கள் எவரும் (கரை வேட்டி கட்டியவர்கள் உள்பட) ஒன்றும் சொல்லவில்லை, அட எந்தவொரு சைகையும் இல்லை. வாக்குச்சாவடி அதிகாரி திரும்பவும் என்னை சமதானப்படுத்த முயல, முடியாது என்ற பாவனை என் முகத்தில் வர, கொஞ்சம் காத்திருங்கள் என்றார். நான் நின்றதை வந்தவர்கள் எல்லாம் பார்த்துச் சென்றனர். ஒரு வழியாக 49 ஓவிற்கான படிவத்தை எடுத்து, கொடுத்து, முடித்து அனுப்பிவைத்தார். வாக்குச்சாவடியை விட்டு வெளியே வந்த பின்புதான் தெரிந்தது, நான் செய்த்து ரகசியம் காக்கப்படவில்லையென்று. அடுத்த தேர்தலின் போது ”மாமா இந்த முறையும் ஓ தானா” என்ற ஏளனம் ஒரு புறம், ஊராட்சி மன்றத் தேர்தலில் மன்ற உறுப்பினருக்கு நின்ற உறவுக்கார அண்ணன் ”எனக்கு ஒட்டுப்போட்டுருப்பா, இதுலேயும் ஓ போட்டிராதா” என்ற அன்பு கட்டளை ஒரு புறம், நான் ஓ போட்டது சரியா? தவறா? என என்னை பலவாறு யோசிக்க வைத்த்து. இவ்வேளையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பினை ஒட்டி வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வாக்கு இயந்திரத்திலேயே நோட்டா பட்டன் பொருத்தப்படவுள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்த போதும் உள்ளபடியே எந்தவித உணர்வையும் உள்மனது உணர்ந்துகொள்ள இயலவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும் உரிமையை வழங்கும் நோட்டா சின்னம் சட்டமன்றத் தேர்தலில் இளம்சிவப்பு வண்ணத்திலும், நாடளுமன்றத் தேர்தலில் வெள்ளை வண்ணத்திலும், செவ்வக வடிவ பொத்தானில் நோட்டா(NOTA) என ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும். இது வேட்பாளர் பெயர் வரிசைப்பட்டியலில் கடைசியாக இடம்பெறும். இதில் மேற்கண்ட யாருமில்லை என்ற வாசகம் அந்தந்த பிராந்திய மொழிகளில் இடம்பெறும். இந்த வாக்குப்பதிவு இயந்திரம் தமிழ்நாடு ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும், வட இந்தியாவில் நடைபெறவிருக்கும் டில்லி, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய சட்டப் பேரவை தேர்தலிருந்து இந்த வாக்குப் பதிவு இயந்திரம் பயன்பாட்டிற்கு வருகிறது.பத்தாண்டுகளாக பலர் மக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும், நீதித் துறையிலும் எடுத்த முயற்சிக்கு கிடைத்த பயனாக மேற்கண்டவை கிடைக்கப்பெற்றுள்ளது. என் ஊரில் தேர்தல் நாள் அன்று ஒரு திருவிழா போல் இருக்கும். என் ஊரில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஆறு இலட்சம் கிராமங்களிலும் உள்ள ஏழைகள், விவசாயிகள், கூலிகள், தொழிலாளர்கள் வரிசையாக நின்று தங்களது கடமையை நிறைவேற்றி வருவார்கள். இந்திய குடிமகன்களாக மகிழ்ச்சியோடு செய்கின்ற பணிகளில் அதுவும் ஒன்று அவர்களுக்கு... நம்மில் பலர் நினைக்கலாம், அவர்கள் எல்லாம் ஓட்டுக்கு துட்டு வாங்கிட்டு செய்கிறார்கள் என்று! இதை இங்கே பேசுவதற்கில்லை.... ஆனால், படித்த, பணம்படைத்த பெரும்பாலோனோர் வாக்குச்சாவடிக்கு வருவதே கிடையாதே. கேட்டால் வேட்பாளர்கள் யோக்கியாவான்கள் இல்லை... வாக்குச்சாவடி வாசல் அறியாத நாம் யோக்கியன்கள்.... நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்தனை பேர்..(வயது வாரியாக) அடடா இளைஞர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இத்தனை பேர்...(குற்றம் வாரியாக) அய்யகோ குற்றவாளிகளின் எண்ணிக்கை இவ்வளவா!. இத்தனை பேர்...(பாலினம் வாரியாக) வருத்த்த்தோடு பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கிறது. இத்தனை பேர்...(வாரிசு வாரியாக) அட இதுல யாரும் விதிவிலக்கில்லை. இத்தனை பேர்...(கல்வித் தகுதி வாரியாக) என புள்ளிவிபரம் தந்து பூரித்துப் போகின்றோம். குற்றவாளிகள் வேட்பாளர்களானது, ரவுடிகள் வேட்பாளர்களாக மாறியது, யாரால்? பெண்களும், இளைஞர்களும் தேர்தல் களத்தில் குறைவாக உள்ளது யாரால்? "பெண்களுக்குப் போதிய பங்கு இல்லாத சட்டசபைகளை நான் பகிஷ்கரிப்பேன்' என்று 1931-இல் நடைபெற்ற இரண்டாம் வட்டமேஜை மாநாட்டின் போதே காந்திஜி பகிரங்கமாக அறிவித்திருந்த போதும், கர்நாடாக சட்ட சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் இரண்டு சதவீதம். அரசியல் சாக்கடை, அரசியல் வாதிகள் பெரும்பாலும் ஊழல் வாதிகள் என திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பது மட்டும் சரியாகுமா? நாடு எனக்கு என்ன செய்த்து என்பதைக் காட்டிலும் நாட்டிற்கு என்ன செய்தோம் என்ற சிந்திப்பது சிறந்தது என்ற வகையில், அரசியல் ஜனநாயகத்தை சரிபடுத்த என்ன செய்யவிருக்கிறோம். நோட்டா அரசியல் வாதிகளை திருத்தும், மாற்றும் என்பது கால்வலிக்கு உடம்பு முழுக்கு பரிசோதனை செய்து வைத்தியம் பார்ப்பது போன்று. நல்லது தான். ஆனால் நமது சோதனைகளை எத்தனை ஆண்டுகளுக்கு செய்வது. இன்னொரு புறம் நோட்டா சின்னத்தில் வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்றால் என்ன செய்வது? அப்படி கிடைக்கப்போவதில்லை... அப்படி கிடைக்கப்பெற்றால்...! தற்போது இந்தியாவில் நடைபெறுகின்ற தேர்தல்களில் சராசரியாக 65சதவீதம் வரை வாக்குப் பதிவு நடக்கிறது. இந்திய அரசியல் வேட்பாளர்கள் அனைவரும் உத்தமர் என்ற வகையில் வாக்களிக்காவிட்டாலும், இவர்களால் ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்து வருகின்றனர். மீதமுள்ள 35 சதவீத வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கே வரவில்லை. இவர்களில் எத்தனை சதவீதம் பேர் வாக்குச் சாவடிக்கு வராமலேயே வேட்பாளர்களை நிரகாரித்தவர்கள் என்பதை ஆய்வு செய்துதான் நோக்க வேண்டும். வாக்களிக்க வராத பெரும்பகுதி பொதுஜனத்திற்கு நியாமான காரணமில்லை என்பதை அத்தனை அறிவுஜீவிகளும் ஒத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் யார்? ஜனநாயகத்தை வலுப்படுத்த, இவர்களை வாக்களிக்க வரவைப்பதற்கு அறிவுஜீவிகள் எனச் சொல்பவர்கள் முயல்வது நல்லது. சமூக வர்க்கத்தில் கீழ்த்தட்டு மக்கள் வாக்களிக்கத் தவறுவதில்லை. பிரபலங்கள் வாக்களித்தும் தங்களது பிம்பங்களை ஊடகங்களில் காண்பித்துக்கொள்கிறார்கள். ஆசிரியர்கள், காவலர்கள் தபால் வாக்களித்து தங்களது கடமையை செய்துகொள்கிறார்கள். ஆனால், நடுத்தட்டில் உள்ள மேல்தட்டு, மேல்தட்டு வர்க்கத்தின் வாக்களிக்கு சதவீதம் எவ்வளவு என்பது வெளியில் சொல்லமுடியாத முடிச்சுதான். சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பராபட்சம் பார்க்காமல் பதிவேற்றம் செய்கின்ற இளைஞர்கள், பண்டிகை பயணத்திற்கு முன்பதிவு செய்கின்ற ஆர்வம், வேகம் தேர்தல் நாளுக்கு இருப்பதில்லை. சென்னை, பெங்களுர், மும்பை போன்று பெரு நகரங்களில் முன்னணி நிறுவனங்களில் பணி புரிகின்ற படித்த இளைஞர்கள் எத்தனை சதவீதம் பேர் வாக்களித்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களில் பணிபுரிகின்ற இளைஞர்கள் தங்களது கிராமத்து வாக்குச்சாவடியில் வாக்களிப்பதை நான் பார்த்திருக்கிறேன். நோட்டா என்ன மாதிரியான விளைவை சமூக தளத்தில் ஏற்படுத்தும் என்பதை ஆழ்ந்து நோக்கும் போது, நமது அரசியல் தளம் இப்படி இருக்கிறதே என வேதனைப்படும் சிலர், ஆட்காட்டி விரலில் கறையை பெற்றுக்கொண்டு, நோட்டா பொத்தானில் கோபத்தோடு வாக்கை அளித்துவிட்டு சென்று விடுவர். பிறகு முருகனைப் போல் கோபம் தணிந்து தங்களது இயல்பு வாழ்க்கையில் தங்களை தயார்படுத்திக்கொண்டு, அடுத்த நாள் தொடர்ந்து விடும். எங்களைப் போன்றவர்கள் இத்தனை சதவீதம் பேர், நோட்டாவில் வாக்களித்துள்ளனர், வேட்பாளர்கள் இவ்வளவு பேர், வெற்றிபெற்றவர்களில் இவ்வளவு பேர் என இன்னொரு புள்ளிவிபரத்தை சொல்லிக்கொண்டே... நமது தேசத்தில் எந்தவொரு மாற்றமும் அரசியல் ஜனநயாத்தின் வழியே செய்ய வேண்டியிருக்கும் போது, இந்த தேசத்தின் மீது அக்கறையுள்ள சிலரை நோட்டா பொத்தான் வழியோடு நிறுத்திக்கொள்வது எந்தவகையில் சரியாகும். தேசத்தின் மீது தீரா பற்றுள்ள அக்கனிக்குஞ்சுகள் அரசியல் ஆட்சிக்கு வரவேண்டும். அந்த அக்கினி உள்ளத்தில் கனன்றுகொண்டே இருக்க வேண்டும். இல்லையேல், இந்தியால் முதல் பிரதமந்திரி நேரு தொடங்கி வைத்த வறுமையை ஒழிப்போம் என்ற ஒற்றை முழக்கம் இன்றைய மன்மோகன் வரை ஒலிக்கிறது. இன்னும் அந்த ஒற்றை முழக்கமே ஒலித்துக்கொண்டு இருக்கும். முழக்கத்தை கூட மாற்ற முடியாத மந்திரிசபையை வெறுப்பது சரிதான். ஆனால், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமே! யார் செய்வது? இந்தியாவில் பலருக்கு தங்கி தூங்கி எழுவதற்கு வீடு இல்லை. சிலரிடம் ஒரு ஊரே உல்லாசமாக வாழ்வதற்கு தகுந்த வசதியுள்ள மாட மாளிகைகள். அரசு பள்ளியில் கழிப்பறை கட்ட ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. பசுமை வீடு கட்ட ரூ.1.8 இலட்சம் போதும் என்பது எந்த வகையில் சரியாகும். சமூக நீதி சரியாக வழங்கிட, சிறப்பான நிர்வாகத்தை வழங்கிட தற்போது பதவியில் இருப்பவர்களிடம் எதிர்பார்ப்பது மட்டுமே சரியாகது. ஏனெனில் அவர்களிடம் சரியான சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அவர்களை மாற்றவும் முடியாது. ஆகையால் மாற்றத்தை தருபவர் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதே சரியான தீர்வாக அமையும். அதைவிடுத்து நோட்டா தோட்டா என்றெல்லாம் பேசுவது வார்த்தை ஜலமாக மட்டுமே இருக்க முடியும். ஒன்றை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். தோட்டா உடைப்பதற்கு சரியாக இருக்குமே தவிர கட்டமைப்பதற்கு சரியாகா... சரியாக ஆட்சி கட்டிலை கட்டமைக்க நெஞ்சுரம் மிக்க இளைஞர் கூட்டம் இந்தியா வெங்கும் கிளம்ப வேண்டும். சாதி, மத, இன வர்க்க பேதமில்லாமல், சமத்துவத்தை ஏற்படுத்தும் ஓர் அரசியல் கூட்டம் விரைவாய் அமையும்.

Friday, December 13, 2013

மணலும் மண்ணும் வரும் தலைமுறைக்கும் வேணும்


அள்ளிய மணலால்
ஆறெல்லாம் மலடாக
தீர்த்தவாரிக்கென வந்த கடவுள்
திகைத்து நின்றார்
தீர்த்தமற்ற ஆற்றைக் கண்டு.
கொண்டுவந்த தண்ணீரால்
குளித்துக் கரையேறி
கருவறை புகுந்தார்
அழிக்கும் மனித சக்தியின்
அளவில்லா மகத்துவம் அறிந்து!
     கே. ஸ்டாலின்

சித்திரை மாத வெயில் உக்கிரமாக இருக்கும் வேளையில், வேப்பமரத்து நிழல் போர்த்துள்ள ஓடையில் கையை தலைக்கு வைத்து மேலாடை இல்லா வெற்றுடம்பில் உறங்கிய அனுபவம் இருக்கிறதாமணலின் சிறு துகள் உடம்பை மெதுவாக அக்குபிரசர் செய்யும்அந்தச் சுகத்தில் உறக்கம் கிறக்கம் கொள்ளும்.   குளு குளு அறைகள் கொடுக்காத சுகத்தை கிராமத்து ஓடைகள் கொடுத்தன. இன்றைய நவீன யுகம் அந்த ஓடைகளையெல்லாம் கெடுத்தன. எங்கள் கிராமத்தில் இருபது இருபத்த்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஆளும் அரசு வீடு கட்டுவதற்கு கடன் கொடுத்த்துஒரே சமயத்தில் இருபது பேர் வீடு கட்டத் துவங்கினர்

மலையிலும், நிலங்களிலும் பேய்கின்ற மிகுதியான மழை நீரை கண்மாய்களுக்கு கொண்டுவந்து சேர்த்த இரண்டு ஓடைகளின் பெருவாரியான மணலை இருபது வீடுகள் தின்றனஅடுத்தடுத்த வருடங்களில் புதிதாக கட்டத் தொடங்கிய வீடுகளால் இரண்டு ஓடையிலும் மணல் இல்லைஓடை பள்ளமானதுஓடையில் மணல் இல்லை. ஓடைக்கான அடையாளங்கள் இழந்து பள்ளங்களாய் பார்க்க பரிதாபமாக காட்சிதருகின்றனஇந்த மணல்களே நீரை உறிஞ்சுபவைதண்ணீரை தன்வயப்படுத்தி, ஓடுகின்ற நீரை தூய்மையாக்குகின்ற பணியையும் இந்த மணல்களே செய்து வந்தனஒரு முறை ஓடையில் நீரோட்டம் இருந்தால் கிணற்று நீர் மேல்நோக்கி எட்டும் தூரத்திற்கு வரும்.

மலை முகடுகளில் பெய்யும் மழை நீர் கீழ்நோக்கி ஓடிவரும்போது, கற்களின் மீதுபட்டு வரும்அப்படி ஓடிவரும் தண்ணீரின் வேகத்தில் கற்கள் சிறு சிறு துகள்களாகி மணல்களாக உருமாறும்இப்படி மணல்களாக உருமாறுவது ஒரிரு வருடத்தில் நடப்பவை அல்லஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடக்க்க் கூடிய இயற்கையின் சிறந்த செயல்களில் ஒன்றுமணலை எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் இழந்து விட்டோம் என்பதுதான் வியப்பாக இருக்கிறதுநாங்கள் சிறுவயதில் மழை காலங்களில், மழை முடிந்த வெள்ளம் வடிந்த நேரங்களில் ஊர் தெருக்களில் கூட மணல் இருக்கும்அதில் நாங்கள் வீடு கட்டி விளையாடியிருக்கோம்.   நாங்கள் கட்டிய வீடுகள் மணல் வீடுகள்அது தெருவிலேயே இருக்கும்அம்மா வந்து இரவு உணவுக்கு அதட்டி அழைக்கும் வரை கட்டி உடைத்துக்கொண்டிருப்போம்அடுத்த நாள் மாலை வேளை வந்தவுடன் மணலில் ஈரம் இருந்தால் திரும்பவும் வீடு கட்டுவோம்எங்களுக்கு வேண்டாதவர்கள் இடிப்பார்கள்வேண்டியவர்கள் எல்லாம் கூடி திரும்பவும் வீடு கட்டுவோம்.   மனிதர்களிடம் ஈரம் குறைந்து போனாதால் தற்போது எங்கள் ஊர் தெருக்களில் ஈரமான மணல் இல்லை. அடுத்த தலைமுறை கூடி விளையாடாமல் தனி அறைகளில் முட்டாள் பெட்டி என்று சொல்லக்கூடிய தொலைக்காட்சி பெட்டி முன் தன்னை மறந்து அமர்ந்து நோயை இழுத்துக்கொள்கிறான்.

கபடியும் கிளித்தட்டும் விளையாடிய மணல் சார்ந்த தெருக்கள் இன்று சிமென்ட்டின் உதவியோடு சிறு கற்கலை வெளித்தள்ளி நிற்கின்றனநாங்கள் மணலை உப்பாய் பாவித்து ஓடி எடுத்து விளையாடிய தெருக்களில் சாக்கடைமழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் ஓடிய தெருக்களில் இன்று எல்லா நாளும் சாக்கடை தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறதுசாக்கடை வாய்க்கால் மணலில் இருந்தால் வடிகட்டுதல், தன்சுத்தம் நடந்திருக்கும்.... சிமென்ட்டால் இருப்பதால் கொசுக்களின் பிறப்பிடமாக மாறியிருக்கிறது.

இலக்கியம் நயத்தில் பேசக்கூடிய அரசியல் வாதி வைகையை பார்வையிட்டு, இங்கு வைகை ஆறு ஓடுவாதாகச் சொன்னார்கள், ஆனால் மணல் ஆறுதான் ஓடுகிறது என்றாராம்ஆனால் வைகையில் பல இடங்களில் மணல் ஆறு கூட இல்லை என்பதுதான் உண்மைவைகை மதுரையை அடைந்து மதுரையைக் கடக்கும் வரை எந்த இடத்திலும் மருந்துக்குக் கூட மணல் இல்லைபின் வைகை எப்படி தூய்மையாக இருக்கும்இயற்கையாக தூய்மைப் பணியை செய்கின்ற மணலை எல்லாம் ஒட்ட வழித்து அழித்து மாளிகை கட்டிக்கொண்டோம்வசமாக தண்ணீர் பற்றாக்குறையிலும், கொசுக்கடியிலும் மாட்டிக்கொண்டோம்

தமிழகத்தில் பல்வேறு நதிகளில் மணல் இல்லைஊர்ப்புறங்களில் ஓடிய ஓடைகளில் எல்லாம் மணலை இல்லாமல் செய்துவிட்டோம்சின்னச் சின்ன நதிகளில் இருந்த மணலையும் இழந்துவிட்டோம்தற்போது ஆங்காங்கே பெரிய நதிகளில் அரசாங்கத்தின் மூலம் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் வழங்கப்படுகிறதுமணல் விலை அரிசிவிலையை விட அதிகம்இருந்தும்  எவ்வளவு விலை கொடுத்தும் மணலை வாங்க தயாராகிவிட்டோம்மணல் வெளியே எடுப்பதால் உள்ள விளைவை மட்டும் மறந்துவிட்டோம்

தமிழகம் புவியியல் ரீதியில் மிகுதியாக கடினப்பாறைகளையம், வண்டல் மண் பகுதியுமாக காணப்படுகிறதுஇதில் கடினப்பாறைகள் எட்டு சதவீத நீரைமட்டுமே நீரைச் சேமிக்கும்வண்டல் மண் 30 சதவீத நீரைச் சேமிக்கும்செம்மண்ணும், மணலும்தான் அதிகப்படியான நிலத்தடி நீரைச் சேமிக்கும்இந்த இரண்டுவகையான மண்ணும் இன்று பொன்னை விட பாதுகாப்பாய் காக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்செங்கல் சூலைக்காக செம்மண் விலைபோகிறதுஅதிகப்படியான வளமுள்ள நிலத்தின் மேல்மண்ணான செம்மண் செங்கள் தயாரிப்பிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்கப்பட்டு வேளாண்மையும் மறுக்கப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர், அம்பானி போன்றோர் தனிநபர்கள் வாழ்வாதற்காக தங்களது வாழ்விடங்களை இயற்கை வளங்களை அபகரித்து மிகப்பெரிய பங்களாக்களை அமைத்துள்ளனர்இது எதிர்கால சந்த்தியினருக்கு இழைத்த மிகப்பெரிய இயற்கைவள துரோகமாகும்.   பெரும்பாலான வசதிபடைத்தோர், தங்களின் தேவைக்கு மிகுதியாக கட்டிடங்களை எழுப்பி மண், மணல் ஆகிய வளங்களை அரிதாக்கிவிட்டனர். நமது தேசத்தில் அரசின் பல்வேறு கட்டிடங்கள் பாழடைந்து பயனற்று கிடக்கின்றனஇவைகள் எல்லாம் பயன்படுத்தாமல் இயற்கை வளங்கள் இன்னலுறுகின்றன.  

மண், மணல் இரண்டும் இத்தேசத்து மக்களின் வாழ்க்கையோடு பிணைந்துள்ள இயற்கை வளம்இவற்றைப் பாதுகாக்கத் தவறுவது மனித இனத்தை பாதுகாக்கத் தவறிவிடுவோம் என்கிற அச்சத்தை ஏற்படுத்த தவறவில்லைஆண்டுதோறும் பெய்யும் மழை அளவு குறையவில்லைஆனால் நிலத்தடி நீர் குறைந்து விட்டதுநிலத்தடி நீரிலும் பல்வேறு பிரச்சனைகள்.... இவைகளின் பின்னால் இருப்பது மணல்... வேளாண்மை பாதிப்பின் பின்னால் இருப்பது மண்மண்ணையும் மணலையையும் பாதுகாக்க அரசிடம் எந்த்த் திட்டமும் கொள்கையும் இல்லை என்பதே வரைமுறையின்றி வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதிலிருந்து நாம் அறிகிறோம்மழை நீரைச் சேகரிக்கின்ற மணலை கட்டிடங்களில் கொட்டுகிறபோது, கொட்டும் மழை நீர் வெள்ளமாகி வீணாகிப் போகிற காட்சியை கண்டுகொண்டே இருப்போம்இருக்கின்ற இயற்கை வளத்தை பாதுகாக்க ஓரிரு அரசு அதிகாரிகள் துணிச்சலோடு செயலாற்றும் போது, உயிரை துண்டாடுகிற கோரச் சம்பவங்கள் மணல் கொள்ளையர்களால் அரங்கேறுகிறதுஆனால் ஆள்வோர்?

சில பகுதிகளில் மக்கள் மணல் கொள்ளையின் பாதிப்பை உணர்ந்து, துணிந்து எதிர்க்கின்ற போது, அவர்களுக்கு ஆள்வோரின் ஆதரவு? வசதிபடைத்தோருக்கு வளங்கள் இன்று வரைமுறையின்றி வழங்கப்படும் போது, எதிர்காலத்தில் பாதிப்பு எல்லோருக்கும் தான்.   நீரையும் மணலையும் சேமிக்கின்ற ஏரி கண்மாய்கள் ஏகத்திற்கு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகின்றனகுவாரிகள் எனும் பெயரில் நீரைச் சேமிக்கின்ற பாறைகளை உடைத்து, சுரண்டல் நடக்கிறதுநீரைச் சேமிக்கின்ற எல்லா இடத்திலும் மனிதன் கைவைக்கும் போது எண்ணில் அடங்கா துயரம் இப்போதே வரத் தொடங்கிவிட்டதுஅச்சம் என்பது மடமையாடா என்பதை மனதில் கொண்டு இயற்கை வளங்களை அபகரிப்பதிலும் அச்சல் கொள்ளாமல் இருப்பது அறிவீணம் என்பதை எப்படி அறிவுறுத்துவது.

மண்ணும் மணலும் பாதுகாக்க வேண்டிய ஒன்று என்பதை அறிந்த பின்பு, ஏதாவது செய்ய வேண்டுமல்லவா? என்ன செய்யலாம்ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக காலத்தோடு மண் கரையால் நிற்கின்ற கண்மாய்கள் ஏரிகள் நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்திற்கு சான்று பகர்கின்றனஆனால் இன்று நமது புதிய தொழில்நுட்பத்தால் உருவான பல கட்டிடங்கள் விரிசலடைந்து வாய்பிளப்பது வேதனையளிக்கிறது. கிராமப் புறங்களில் உருவானஅரசு கட்டிடங்கள் தனிநபர் கட்டிடங்கள் போல் நீடித்த காலத்திற்கு உறுதியாக இருப்பதில்லை. அரசு கட்டிடங்களை நன்கு பாரமரித்து நீடித்த ஆயுளை கட்டிடங்கள் பெறும்போது புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அவசியமில்லாமல் போகிறதுஇதனால் இதற்குத் தேவையான மணல், கல், செங்கல், சிமென்ட் போன்ற வளங்கள் மிச்சப்படுத்தப்படுகின்றன

தனிநபர்கள் வாழ்விடங்கள் கட்டும்போது வசதிக்கு கட்டாமல் வாழ்வதற்கு போதியளவிற்கு மட்டும் வீடுகள் கட்டும் போது நிலம் தொடங்கி, பல்வேறு வகையில் இயற்கை வளங்கள் காக்கப்படுகின்றனநமது முன்னோர்கள் வசித்த வாழ்விடங்களை சீரமைப்பு செய்து வசிப்பிடங்களாக மாற்றியமைப்பது புத்திசாலித்தனமாகும்சிலர் வாஸ்து பார்த்து வீடுகளை தொடர்ச்சியாக மாற்றியமைக்கின்ற வீண் செலவை தவிர்க்கலாம்.

வீடுகளுக்கான சுற்றுச் சுவர் கட்டுவதை கூடுமானவரை தவிர்க்கலாம்சுற்றுச் சுவர் அவசியம் எனும் போது தாவரங்களினால் வேலி அமைக்கலாம்உயிர் தாவரங்கள் மூலம் சுற்று வேலி அமையும் போது காண்பதற்கு குளிர்ச்சியையும், சூழல் பாதுகாப்பையும் தரும்பொதுவாக சுற்றுச் சுவர் அமைக்கப்படுவது தொழிற்சாலைகள், பெரிய வீடுகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இவைகளில் உயிர் தாவர வேலி அமைத்து பாரமரிப்பது பெரிய செலவாக இராதுஎனவே, இனிமேல் புதிதாக சுற்றுச் சுவர் கட்டமால் உயிர் தாவர வேலிக்கு முன்வரலாம்.

கிராமங்கள் தொடங்கி பெரும் நகரங்கள் வரை தோரண வாயில் அமைப்பது ஒரு படோபடமாகவே படுகிறதுகல், மணல், சிமென்ட் கொண்டு அமைக்கப்படுகிற தோரண வாயில்கள், அலங்கார வளைவுகள் அவசியமற்றவைஎந்தவொரு பயன்பாடுமின்றி, சுய விளம்பரத்திற்கும், அழகுக்கும் இயற்கை வளங்களை அழிப்பது நியாயமாக.   பல்வேறு புங்காக்களில் மரங்களைக் கொண்டே அழகுடன் தோரண வாயில் அமைத்திருப்பர்காண்பதற்கு இதமாகவும், இயற்கைக்கு வலுசேர்ப்பதாகவும் இருக்கும்அதை விடுத்து இயற்கைக்கு எதிராக தோரணவாயில்கள் அமைப்பதை தவிர்த்திடலாம்.   அரசாங்கம் இது போன்ற பணிகளில் ஈடுபடுவதை கொள்கை முடிவாக எடுத்து நிறுத்திக்கொள்ளலாம்.

ஆள்வோர்கள் தொடர்ச்சியாக எல்லாத் தெருக்களையும் சிமென்ட் தெருக்களாக மாற்றிவிட திட்டம் வகுத்து செயல்படுகின்றனர்ஆட்சியாளர்கள் மாட்சிமையோடு கவனிக்க வேண்டிய விசயம் இந்த சிமென்ட் சாலைகள்ஊரில் விழுகிற ஒரு சொட்டு தண்ணீர் கூட நிலத்திற்குள் செல்லாமல் ஊரை விட்டு ஓடச் செய்கிறது சிமென்ட் சாலைகள்நிலத்தடி நீர் மாசகிவருகிற இந்தச் சூழலில் அந்தந்த இடங்களில் மழை நீரை சேமிக்க வேண்டிய நாம், மண் மாத மீது கல், மணல் கலந்த சிமென்ட் வைத்து அடைப்பது தகாது

மண்ணையும், மணலையும் பாதுகாக்கின்ற இன்னொரு இயற்கை தந்த கொடை மரங்கள்மரம் மண்ணின் அரண்அரண்மனைக்காக அரண்கள் எல்லாம் காவுவாங்கப்படுகின்றனமரங்களைக் காப்பதும், வளர்ப்பதும் மண்ணை வளப்படுத்த ஏதுவாக அமையும்நாம் புதிதாக உருவாக்கின்ற கட்டிடங்கள் எத்தனை இயற்கை வளங்களை ஏப்பம்விடுகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தாக வேண்டும்அதற்காக நீங்கள் யாரும் வீடு கட்ட வேண்டாம், பரதேசிகளாக மண் மாத மீது படுத்துறங்குங்கள் என்று சொல்லவில்லைபுதிதாக கட்டிடம் எழுப்பும் போது, எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து செய்யுங்கள்அவற்றின் பயன்பாட்டை கணக்கிடுங்கள்அளவான வீடு, வளமான வாழ்வு, வளங்கள் பாதுகாப்பு என்பதை உணர்ந்திடுங்கள் என்றே சொல்கிறோம்


சிலரைப்பார்த்து ஏலேய்... மண்ணு.... என்று சொல்வதுண்டுமண் என்பது சாதரணமில்லை, அது உயிர்களின் தொகுப்புஉணர்ந்திடுவோம். மண்ணையும் மணலையும் காத்திடுவோம். போட்டிகளில் சொல்வதுண்டு, மண்ணைக் கவ்வ வைப்பேன் என்று, ஆனால் இன்று பலர் மணல் திருடுவதில் கெட்டிக்கார்ர்களாய் கொடிகட்டிப் பறக்கின்றனர்அவர்களது கொடி கட்டாயம் இறக்கப்பட வேண்டும்எதிரியாய் இருந்தாலும், குருதி உறவாய் இருந்தாலும் இவ்விசயத்தில் ஆள்வோரும் வாழ்வோரும் இரக்கம்கொள்ள வேண்டாம் என்ற வேண்டுகோளோடு நிறைவு செய்கிறேன்.
பசுமைத்தாயகம் சுற்றுச்சூழல் இதழில் வெளிவந்த கட்டுரை